Saturday, March 13, 2010

நிலவரசி

கீழ் வான திசையிலே
தொடுவான எல்லையிலே
தென்னை மர உச்சியிலே
கண்டேன் அழகிய காட்சியை

தக தக தாம்பாளம்
பள பள தக்காளிப்பழம்
கண்ணைக்கவரும் வண்ண பந்து
விண்ணில் விரிந்த ஓர் விருந்து

கரு கருவென இரவு கவிழ்ந்திட
விறு விறுவென வெள்ளி முளைக்க
வளர்ந்த நிலவின் உலா
வானத்திலே ஒரு திருவிழா

ஒய்யார நிலவரசி ஊர்கிறாள்
கண்சிமிட்டும் தாரகைகள்
உல்லாச கதைகள் பேசிட
உளம் குளிர கேட்கிறாள்

காணாத கதிரவனை
கனன்றெரியும் பகலவனை
இனிக்க இனிக்க வர்ணிக்க
விடிய விடிய ரசிக்கிறாள்

பராக்கிரம பரிதியினை
விண்ணுலக நாயகனை
உலகியக்கும் காரணியை
உன்னதமான காதலனை

வெய்யோனை விழி காண
விரும்பியவன் கரம் சேர
கசிந்துருகி ஏங்குகிறாள்
கண் மயங்கி தவிக்கிறாள்

எட்டாத எழிலோனை
ஈடில்லா மன்னவனை
எண்ணி எண்ணி தேய்கிறாள்
நம்பி நம்பி வளர்கிறாள்

தொடருகின்ற நாடகம்
முடியாத காவியம்
அலுக்காத அவதாரம்
ரசிக்கிறது பூலோகம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community