Saturday, March 13, 2010

ஓரவஞ்சனை

படைத்தவன் காட்டினானே பாரபட்சம்
புஜபலத்தோடு அகன்ற மார்போடு
திரண்ட தோளோடு நெடிய உயரத்தில்
ஆணை படைத்தான் அதனால் அவன்
காடு நுழைந்து மலையேறி கடல்தாண்டி
பனிமலையிலும் பாலைவனத்திலும்
தடம் பதித்தான் தனதாக்கினான்
சாகசம் செய்தான் சாதனை புரிந்தான்
அறிவியல் கற்றான் அரசியல் செய்தான்
ஆய்வுகள் ஆயுதங்கள் அவன் களங்கள்
ஆதிக்கம் செய்திட பிறந்தவனானான்
வல்லவன் என்றே செருக்கொண்டான்
வானத்தை வில்லாய் வளைக்கின்றான்
விரும்பிய வண்ணம் வாழ்கின்றான்

வெயில் படாமல் நிழலில் மெல்லியவள்
சமைந்தாள் சுமந்தாள் சமர்த்தாயவள்
சத்தமின்றி சமைத்தாள் சமுதாயத்தை
சாம்பல் தின்றாள் சோம்பல் மறந்தாள்
உதைத்து புரண்ட உருவை உணர்ந்தாள்
விண்ணென்ற வலிக்குப் பின்னே உதிர்த்தாள்
விண்ணுலகம் காணாத ஓர் அதிசயத்தை
செப்பு வாய் மார்பை சுவைக்கையில்
செல்ல மொழி குழலாய் ஒலிக்கையில்
சின்ன நடை தேராய் அசைகையில்
தாய்மை தவமாய் தாரக மந்திரமாய்
திசையெங்கும் முட்டி மோதி எதிரொலிக்க
இன்பத்திலும் துன்பத்திலும் வெடிக்கும்
வார்த்தை ‘அம்மா’ என்றாகிப் போனதில்
முழுதாய் பொருளை புரிந்துகொண்டாள்
மெளனமாய் அவள் பூரித்து நின்றாள்

பேறென்ன பேறே அவள் பெற்றது
ஆண்மகன் ஒருநாளும் அறியாதது
அதுவே ஆண்டவன் ஓரவஞ்சனை
தானாய் தாயை படைத்த வாஞ்சை
பெண்ணே நீ உன் சிறப்பை கவனி
சமரின்றி தனி சீர்மை போற்று இனி

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community