Saturday, March 6, 2010

திடுக்கிடும் உண்மைகள்

நேற்று இனிய மாலைப் பொழுதில் பல்பொருள் அங்காடிக்கு சில மளிகை பொருட்கள் வாங்கச் சென்றிருந்தோம். ஏதோ ஒரு பொருளை தேட முடியாமல் அங்கு பணி புரியும் ஒரு சிறு பெண்ணின் உதவியை நாடினேன். அவளும் உடனடியாய் என்னை அழைத்துச் சென்று, ‘இங்கே இருக்கு, பாட்டி’ என்றாள்! எனக்குள் ஒரு திடுக்கிடல்! பல ஊர்களில், பல இடங்களில் இது வரை ‘ஆன்டி’, ‘மேடம்’ போன்ற விளிச்சொற்களுக்கு பழகிப் போன என் செவிகளுக்கு இந்த புதிய சொல் ஏனோ சங்கடமான உணர்வை தந்து மூளைக்குள் ஒரு தவிப்பையும் தோற்றுவித்துவிட்டது. அந்தப் பெண் மீது ஒரு தவறும் இல்லை, அவளுடைய சொந்த அப்பனையோ ஆத்தாவையோ பெத்தவளை அழைப்பது போன்ற வாஞ்சையுடனும், பணிவுடனும்தான் அழைத்தாள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வயதில் முதிர்ந்த ஒரு மாதினை ‘பாட்டி’ என்றழைத்தது மிகவும் பொருத்தமே. குழந்தை பருவம் முதல் கூடவே வளர்ந்த ஒப்பனை ஆசைகளும், ஒப்பற்ற ஆர்வங்களும், உடல் ஓய்ந்த நிலையிலும் ஓயாத சிந்தனை செயல்பாடுகளுமாய் உலா வரும் எனக்கு வயது பற்றிய பிரஞ்கையே இருந்ததில்லை! முதுமை என்ற ஒரு விஷயத்துக்கும் எனக்கும் எதுவுமே சம்பந்தமில்லாதது போல்தான் எனது எண்ணங்களும் நடவடிக்கைகளும் இருப்பது வழக்கம். நான் கண்ணடி முன் கழிக்கும் மணித்துளிகள் மிகவும் குறைவு- எனவே நரைக்கத் துவங்கிவிட்ட தலைமுடியும், பொலிவிழக்கத் துவங்கிய முக சருமமும் மூளைக்குள் பதிவாகி மறுகணமே மறக்கப்பட்டுவிடும்! இப்படியாக என் இயல்பு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கையில் ‘பாட்டி’ என்று அழைக்கப்பட்டவுடன் ஒரு திடுக்கிடல் நேர்ந்ததென்னவோ உண்மைதான்.

மீதி வெளி வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிறகு வெளிநாட்டிலிருக்கும் மூத்த மகனுடன் இணையத்தில் உரையாடத்துவங்கியதும் அடி மனதில் நெருடிக்கொண்டிருந்த விஷயத்தை, ஒரு பெண் என்னை கடையில் ‘பாட்டி’ என்று அழைத்ததை கூறினேன். அவனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், 10 வருஷத்துக்கு முன்பே பாட்டி ஆகிவிட்டீர்கள்தானே?’ என்றான்! அவன் மூத்த மகனுக்கு 10 வயது. அது ஒரு மகிழ்ச்சியான பதவியேற்றம், வயதை எவ்விதத்திலும் குறிக்கும் சம்பவமல்ல என்றேன். இந்த ‘பாட்டி’ என்னை கிழவி என்று அடையாளம் காட்டுதோ என்று ஐயுறுவதாக சொன்னேன். பேரப்பிள்ளைகள்- மொத்தம் 6- வழங்கிய பதவி வேறு முதுமையை சுட்டிக்காடும் பொருள் வேறு அதே சொல்லுக்கு என்று என் மூளை குதர்க்கமாக, பிடிவாதமாக உணர்த்திக் கொண்டேயிருந்தது. இன்று அயல்நாட்டிலிருக்கும் மகளிடமும் இதையே தொலைபேசியில் சொல்லி புலம்பினேன். உங்களை எங்கள் பிள்ளைகள் ‘ஆச்சி’ என்றும் ‘அப்பம்மா’ என்றும்தானே அழைக்கிறார்கள், அவர்கள் பிள்ளைகளுக்குதான் நீங்கள் பாட்டியாவீர்கள் என்று புது விளக்கம் கொடுத்தாள். இன்னும் ஒரு தலைமுறை இருக்கிறது நான் பாட்டி ஆவதற்கு அவள் விளக்கப்படி என்றாலும் முழு ஆறுதல் கிடைத்தபாடில்லை. தலைமுடிக்கு சாயம் தடவி வயதை மறைக்க முயலுகின்றவர்களைப் பார்த்து முகச் சுருக்கமும், முகத்தில் ஓர் அனுபவ முதிர்ச்சியும் அவர்கள் முயற்ச்சியை தோற்றுப்போக செய்கின்றனவே என்று வேடிக்கையாக ரசிப்பவள் நான். அலங்காரம் பிடிக்கும், அழகுணர்வை காட்ட, போலி தோற்றம் காட்ட அல்ல!
உலகின் வார்த்தை பிரயோக பழக்கங்களுக்கு என்னை இனி தயார் செய்து கொண்டால் திடுக்கிட வேண்டியிருக்காது. மனது என்றும் அப்படியே இளமை உணர்வோடு, குழந்தையின் குதூகலத்தோடுதானே இருக்கப் போகிறது? யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடட்டும்! மறுக்காமல் மரியாதையை அங்கீகரிக்க பழகிக் கொள்வேன் இனி!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community