Saturday, March 13, 2010

அல்லி-மல்லி அலசல்-1

மல்லி: அல்லி, என்ன செஞ்சிட்டிருக்க?

அல்லி: பள்ளியிலேர்ந்து பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு குடுக்குறதுக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன், மல்லி.

மல்லி: கடையிலதான் வித விதமா விக்குதே?

அல்லி: வாய்க்கு ருசியா என்னென்னவோ விக்குதுதான். ஆனா, அதில கெடுதலும் நிறைய இருக்கே. அபரிதமான வளர்ச்சியோட இப்ப காலத்து பிள்ளைகள், பாக்குறதுக்கே விகாரமா மாறிகிட்டு வர்றத நீயும் கவனிச்சிருப்பியே? அளவுக்கதிகமான கலோரிகளோட, உடல் எடையை கூட்டும் விதமாத்தான் கடையில் விக்குற பலகாரங்கள் இருக்கு.

மல்லி: ஓ! அதனால கைப்பக்குவமா, தரமான பொருள்கள வச்சி வீட்டிலயே பலகாரம் செய்யப்போறே? பிள்ளைங்களோட பசிக்கு நல்ல தீனி தரப் போறே/

அல்லி: பசியைப் பத்தி யோசிச்சிப் பாத்திருக்கியா? மனிதனோட இயற்கை உந்துதல்கள்ல முதல் இடம் பசிக்குன்னு தெரியுமா உனக்கு?

மல்லி: பசி வந்திட பத்தும் பறந்து போம்னு பழமொழி கூட இருக்கே?

அல்லி: அந்த பழமொழிக்கு ரெண்டு விதத்துல அர்த்தம் எடுத்துக்கலாம். பத்து நல்ல குணங்கள் பறந்து போய்விடும் அப்படின்னு சொல்லலாம். “பற்றும் பறந்து போம்” அப்படின்னு எடுத்துகிட்டா பாசம்ங்கிற பற்றும் பறந்து போய்விடும்னு அர்த்தமாகுது.

மல்லி: அதனாலதான் தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுன்னு சொல்றாங்க.

அல்லி: வயிறு படுத்தும் பாட்டைப் பத்தி ஔவையார் சொல்றத கேட்டியா? “ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய், இரு நாள் உணவை ஏல் என்றால் ஏலாய், இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது”.

மல்லி: ஆமா. ஒட்டகத்த மாதிரி நம்மால ஸ்டோர் பண்ணிக்க முடியாதுங்கிறாங்க. ஒரு நாள் சாப்பிடாம இருக்கிறதும் கஷ்டம், 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டுக்கவும் முடியாது-இப்படி தராறு பண்ற வயிறோட வாழ்றது கஷ்டம்னு பாட்டி சரியா சொன்னாங்க.

அல்லி: அவங்க கோணத்துல பாத்தா வயிறால தொந்தரவுதான். ஆனா ஒரு மனிதனோட மனசுக்குள்ள நுழையறதுக்கு அவனோட வயிறு வழி வகுத்துக் கொடுக்குதுன்னு ஒரு ஆங்கில பழமொழி சொல்லுது. “The way to a man’s heart is through his stomach.”

மல்லி: அது ரொம்ப கரெக்ட். கணவருக்கும், குழந்தைகளுக்கும் பிடிச்ச சாப்பாட்டை வயிறார உண்ணக் குடுக்குற இல்லத்தரசிகள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாத்தான் இருக்கு.

அல்லி: இந்த சர்வ வல்லமை படைச்ச வயிறுக்கு புத்தி புகட்டுறதுக்காக மத்த அவயவங்கள் வேலை நிறுத்தம் செஞ்ச நீதிக்கதை ஞாபகத்துக்கு வருது. வீண் கர்வத்தால வயிறு பசியால வாடி அதுக்குப் பிறகு உண்மையை உணர்ந்துகிட்டது.


மல்லி: வயிற்றுப் பசியோட கொடுமைய முழுசா உணர்ந்த பாரதியார், “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” அப்படின்னில்ல கர்ஜனை பண்ணினாரு?

அல்லி: பசிப்பிணியைப் போக்க மணிமேகலைக்கு ஒரு அமுதசுரபி கிடைச்சதால காயசண்டிகைக்கு சாப விமோசனம் கிடைச்சது.

மல்லி: ஒரு அமுதசுரபியின் உதவியோட மணிமேகலையால பசிப் பிணியை ஒழிக்க முடிஞ்சுதுன்னா திரௌபதிக்கோ பாத்திரத்துல ஒட்டிக்கிட்டிருந்த ஒரு பருக்கையே அட்சய பாத்திரத்தோட மாயத்த செஞ்சதா மகாபாரதம் சொல்லுது.

அல்லி: ஒரு பருக்கையால பசி தீர்க்க முடியும்னு திரௌபதி வழங்கின யாசகம் உணர்த்துச்சி. ஆனா, மிகப் பெரிய ராஜா வீட்டு திருமண விருந்துக்கு சமைச்ச மொத்த சாப்பாடும் ஒத்தை ஆளான கடோத்கஜனுக்கு போதலையாம்.

மல்லி: கௌரவர் வீட்டு கல்யாணத்துக்கு வந்த கடோத்கஜனை மாதிரியே மலையத்வஜன் மகள் பார்வதியை மணக்க வந்த சுந்தரேஸ்வரரின் பக்தனான குண்டோதரனும் பாண்டியராஜன் தயாரிச்ச மொத்த உணவையும் உண்டு முடித்தானாம்.

அல்லி: இப்படிப்பட்ட பெருந்தீனியர்கள் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் கோபெருஞ்சோழன், பிசிராந்தையார், கபிலர் போல வடக்கிருந்து -அதாவது உணவருந்தாம- உயிர் விட்டவங்க நிறையப் பேர்.

மல்லி: உண்ணாவிரதம் பிற்காலத்துல மகாத்மா காந்தி கையில எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதமா இருந்து நம்ம நாட்டுக்கே சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததுங்கிறதுதான் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயமாச்சே.

அல்லி: வருஷத்தில, மாசத்தில, வாரத்தில இத்தனை வேளை, இன்னின்ன கிழமை உண்ணாம நோன்பிருக்கிறது எல்லா மதத்துலயும் இருக்கிற ஒரு ஆன்மீக நெறிக்கான பழக்கமாகவே பல நூற்றாண்டுகளா இருந்து வருது.

மல்லி: இந்த விரதமிருக்கிற பழக்கத்தால நற்சிந்தனைகள் வளர்ந்து தர்மம் தழைக்கிறதோட “லங்கணம் பரம ஔ ஷதம்”ன்னு சொல்ற மாதிரி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குறதால, மருந்து மாதிரி இருக்கிறதால, அத வைத்திய சிகிச்சைன்னு கூட சொல்லலாம்.

அல்லி: விரதம் இருக்கிறது உடல் நலத்துக்கு மட்டுமில்ல, நாட்டோட பொருளாதாரத்துக்கும் கூட நல்லதுங்கிறதுனாலதான் நம்மோட முந்தைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி “miss-a-meal on Monday”ன்னு ஒரு வழக்கத்தை கடைப் பிடிக்கச் சொன்னாரில்லையா?

மல்லி: அவர் ஒரு வேளை சாப்பாட்டைக் குறைக்கச் சொன்னாருன்னா வள்ளுவப் பெருமானோ எப்பொழுதுமே குறைவாக உண்பது நல்லதுங்கிற அர்த்தத்திலதான் “செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”னு சொன்னாரு.

அல்லி: குறைவா சாப்பிடணும்னு சொல்ற இன்னொரு பழமொழி தெரியுமா?

மல்லி: சொல்லு, கேட்போம்!

அல்லி: ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூணு வேளை உண்பவன் ரோகி.

மல்லி: உடல் பருமனைப் போக்க, உடல் இளைக்க சொல்லப்படுகிற ஆலோசனையில கூட வயிறு முட்ட சாப்பிடக்கூடாது, முக்கால் வயிறு நிறைஞ்சதுமே சாப்பாட்டை முடிச்சிக்கணும்னு சொல்றாங்க.

அல்லி: உண்ண வேண்டிய அளவு என்ன, எத்தனை வேளைன்னெல்லாம் பாத்தாச்சி, உண்ண வேண்டிய முறை என்னன்னு நம்ம முன்னோர்கள் சொல்லியிருக்காங்க தெரியுமா?

மல்லி: “மருந்தேயாயினும் விருந்தோடுண்” அப்படின்னும், “அறுசுவை உணவேயாயினும் விருந்தில்லா உணவு பாழ்” அப்படின்னும் தமிழர்களோட விருந்தோம்பல் குணத்தை அழகா சொல்லியிருக்காங்க.

அல்லி: அப்படி விருந்தினரோட உணவு உண்ணனும்ங்கிற பழக்கம் இருந்ததினால நிறைய அனுகூலங்கள் இருந்திச்சாமே? உதாரணமா புருஷன் பெண்டாட்டிக்குள்ள சண்டையிருந்தா விருந்தாளி வருகையில தீர்ந்திரும்னு “விருந்து கண்டொழித்த ஊடல்”ன்னு சொல்லப் பட்டிருக்கு.

மல்லி: விருந்தினர்கள் பத்தின கதைகள்ல வேடிக்கையுமுண்டு, விபரீதமுமுண்டு. சபரி தன்னோட அதிதிகளான ராமலட்சுமணர்களுக்கு பழத்தை கடிச்சி சுவைச்சிப் பாத்து பரிமாறுனதில எச்சில் கூட புனிதமான அன்பைக் காட்டுது. அதே மாதிரி சிவனடியார் ரூபத்துல வந்த ஈசன் பிள்ளைக்கறி கேட்ட சோதனையில அந்த தம்பதியோட பக்தி தான் ஜெயிச்சது.

அல்லி: எதை விருந்தா பரிமாறுகிறோம்ங்கிறது முக்கியமில்ல, ஆத்மார்த்த அன்போட பரிமாறணும். அப்படி பரிமாறும்போது விருந்து மணம் பெற்றதாகுதுன்னு இன்னொரு உதாரணம் மூலமும் தெரிஞ்சிக்கலாம். வறுமையில வாடின போதும் அங்கவை, சங்கவைங்கிற பாரி வள்ளலோட இரு மகள்களும் ஔவையாருக்கு அப்போதைக்கு தங்களால முடிஞ்ச எளிய கீரைய சமச்சிச் சாப்பிடச் சொன்னது ருசியான விருந்தாச்சாம்.

மல்லி: எளிய உணவுன்னதும் எனக்கு குசேலர் கிருஷ்ணருக்குக் குடுத்த அவல் ஞாபகம் வருது. ஒரு பிடி அவலுக்குள்ள ஒழிஞ்சிருந்த நட்புங்கிற அன்பு குசேலருக்கு குபேர யோகத்தையில்லியா கொண்டு வந்தது?

அல்லி: அன்போட குடுத்த அவல் சுபிஷத்த குடுத்ததென்னவோ வாஸ்தவந்தான். ஆனா கலகக்கார நாரதர் கொண்டு வந்து குடுத்த மாம்பழத்தால பரமசிவன் குடும்பத்தில பிரிவினையில்ல வந்துச்சி?

மல்லி: அருமையான மாம்பழத்திற்கு அண்ணன் தம்பிக்குள்ள சண்டை வந்துச்சி. ஆனா கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை ஔவைக்கு குடுத்து அதியமான் பெருமை அடைஞ்சிருக்காரு.

அல்லி: ஆனாலும் ஔவை ஒன்னும் லேசுப்பட்டவங்க இல்ல. காரியம் சாதிக்க வேண்டி பெரிய புள்ளிகள் விருந்து வைக்கிற வழக்கம் அவங்க காலத்திலய இருந்திருக்கும் போல. அதனாலதான் பிள்ளையார்கிட்ட பாலும், தெளி தேனும், பாகும், பருப்பும் நான் தர்றேன், பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் நீ எனக்குத் தான்னு பேரம் பேசியிருக்காங்க.

மல்லி: சங்கத் தமிழுக்கு ஆசைப்பட்ட ஔவையார் மட்டுமில்ல, சாதரண பேச்சுத்தமிழை உபயோகிக்கிற மூத்தவங்களும் சாப்பாட்டை சம்பந்தப்படுத்தியே தங்களோட அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியிருக்காங்க. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்” அப்படின்னும், “ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்” என்றும், “ஒரு பிள்ளை பெற்றவனுக்கு சாப்பாடு உறியில, நாலு பிள்ளை பெற்றவனுக்கு நாற்சந்தியில” அப்படின்னும் சொல்லியிருக்கிறத பாக்கும் போது பசிங்கிற உந்துதல் மனிதனோட வாழ்க்கைல ஒரு பெரிய சக்தியா விளங்குதுன்னு புரியுதில்லையா?

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community